மாதக்கணக்கில் நீண்ட திருமணம்
பழைய பாலிவுட் திரைப்படங்களில் ஒரு வழக்கமான திருமணக் காட்சி இடம்பெறும்.
ஆடம்பரமான ஊர்வலங்களுடன் ஆரம்பிக்கப்படும் திருமண கொண்டாட்டங்களில், ஏழு சபதங்களுடன் (சப்தபதி) திருமணம் நடைபெறும் நேரத்தில், வருத்தம் தோய்ந்த நபர் ஒருவர் நொறுங்கிய இதயத்துடன் வருவார்.
அந்த நபர், “இந்தத் திருமணம் நடக்கக் கூடாது” என்று கூறுவார்.
பிற்காலத்தில் நவீன திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. திருமணங்கள், ஆடம்பரமான ஊர்வலங்கள் இல்லாமலும் திரைப்படங்களை உருவாக்கலாம் என இயக்குநர்கள் உணர்ந்தனர்.
திருமணத்திற்குப் பின்னர்தான் உண்மையான, பெரும் கதைகள் இருப்பதாகவும், அதுகுறித்து திரைப்படங்கள் உருவாக வேண்டும் எனவும் சிலர் கருதுகின்றனர்.
இப்போது 2024ஆம் ஆண்டில் பாதிக் காலம் கழிந்துவிட்டது. இந்தக் காலக்கட்டத்தில் காஸாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகளை இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், அம்பானி மகனின் திருமணம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திருமணங்களில் ஆடம்பரத்தை வெளிக்காட்டுவது பணக்காரர்களின் பழைய வழக்கம். முன்பு மெஹந்தி, பராத் (மணமகனின் திருமண ஊர்வலம்), வலீமா (திருமண விருந்து) ஆகியவை நடைபெற்றன.
பணக்கார திருமணங்களில் அமைச்சர் அல்லது கலைஞர்களை அழைக்கலாம். மேலும், நடிகர்கள்/பாடகர்களுக்குப் பணம் கொடுத்து வரவழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
அதன் பின்னர், உணவு விநியோகிக்கப்படும். வந்திருக்கும் எல்லோருக்கும் வயிறு நிறைய உணவளிக்க வேண்டும். பின்னர், இடத்தைக் காலி செய்துவிட்டு, அவரவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.
அம்பானி உலகளவில் பிரபலமான தொழிலதிபர் என்பதால், அவருடைய பிம்பமும் மிகப்பெரியது. மார்க் ஜுக்கர்பெர்க், பில்கேட்ஸ் ஆகியோரும் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
பாலிவுட்டின் ‘கான்’ நடிகர்கள் பாங்ரா நடனமாடினர். ஜஸ்டின் பீபரும் நடனமாடினார். ரிஹானா, தில்ஜித் தோசான்ஸ் ஆகியோரும் நடனமாடினர், எல்லோரையும் நடனமாடவும் வைத்தனர்.
அம்பானி மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் பாடும், நடனமாடும் வீடியோக்களும் வெளியாகின. நாங்கள் பணக்காரர்களைவிட பணக்காரர் என்றாலும் உங்களைப் போன்றவர்கள்தான் என அவர்கள் நமக்குச் சொல்கின்றனர்.
ஷாருக் கான் மற்றும் கரீனா கபூராக நாமும் மாறி கேமராக்கள் முன்பு உதட்டசைக்க நம் இதயமும் ஆசை கொள்கின்றன.