ஸ்வீடனின் பிரதமராக மேக்தலீனா மீண்டும் தேர்வு

30.11.2021 08:13:26

ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் ராஜினாமா செய்த மேக்தலீனா ஆண்டர்சன் 54 நேற்று மீண்டும் அந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐரோப்பிய நாடான ஸ்வீடன் பார்லிமென்டில் அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு ஜூனில் நடந்தது. அதில் தோல்வியடைந்ததால் ஸ்டீபன் லோபன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிகமாக பொறுப்பு பிரதமராக அவர் இருந்து வந்தார். ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. மொத்தமுள்ள 349 இடங்களில் 175 எம்.பி.க்களின் எதிர்ப்பு இல்லாதவர்கள் மட்டுமே பிரதமராக முடியும்.

இந்நிலையில் கடந்த வாரம் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஓட்டெடுப்பு நடந்தது.அதில் 117 பேர் நிதி அமைச்சராக இருந்த மேக்தலீனாவுக்கு ஆதரவாகவும் 174 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தனர். ஆனால் 175 பேர் எதிர்ப்பு இல்லாததால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மேக்தலீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஆனால் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் பார்லியில் தோல்வியடைந்தது. இதையடுத்து ஏழு மணி நேரத்தில் பிரதமர் பதவியில் இருந்து மேக்தலீனா விலகினார்.இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நேற்று மீண்டும் ஓட்டெடுப்பு நடந்தது.இதில் மேக்தலீனாவுக்கு ஆதரவாக 101 பேரும் எதிராக 173 பேரும் ஓட்டளித்தனர். மேக்தலீனாவுக்கு ஆதரவாக முக்கிய கட்சியான சென்டர் கட்சியின் 75 எம்.பி.க்களும் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து சமூக ஜனநாயகக் கட்சியின் மேக்தலீனா ஆண்டர்சன் நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அடுத்தாண்டு செப்.ல் பார்லிக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவர் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.