பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'

07.05.2024 07:07:00

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராகவும், 'லவ் டுடே' படத்தின் மூலம் நடிகராகவும் வெற்றி அடைந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'டிராகன்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான பிரத்யேக காணொளியை பட குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் 'டிராகன்' எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் ஏனைய வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இளைஞர்களை கவரும் பொழுதுபோக்கு படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம்- கல்பாத்தி எஸ். கணேஷ் - கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் இந்த திரைப்படத்தின் தலைப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. 'டிராகன்' என்பது சீனாவில் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டின் பெயர் என்பதாலும், இந்த திரைப்படம் இளைஞர்களை கவரும் வகையில் தயாராகிறது என்பதாலும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தலைப்பு அறிவித்த தருணத்திலேயே எகிறி இருக்கிறது.