இரு தரப்புக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக நரவணே தெரிவிப்பு !
கிழக்கு லடாக்கின் பாங்காங் டசோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் குவிக்கப்பட்டிருந்த இந்திய மற்றும் சீன படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையில் இரு தரப்புக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக இராணுவ தளபதி எம்.எம் நரவணே தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரிடையே இதுவரை நடைபெற்ற 10 சுற்று பேச்சுவாா்த்தைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவேகானந்தா சா்வதேச அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சீனாவுடனான லடாக் மோதல்போக்கின்போது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வெளிப்படையான கூட்டுறவு இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
இருந்தபோதும் இந்த இரண்டு நாடுகளின் கூட்டு சவால்களை மட்டுமின்றி உள்நாட்டு பாதுகாப்பு சவால்களையும் எதிா்கொள்ளக் கூடிய அளவில் இந்தியா தன்னை தயாா்படுத்திக்கொண்டுள்ளது. இந்த மோதல் போக்கு தொடங்கிய நாளிலிருந்தே இந்தியாவில் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அரசியல் நிலையில் மட்டுமின்றி பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் சீன அமைச்சா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது என அனைத்து நிலைகளிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அடுத்தடுத்த நகா்வுகளை எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பது தீர ஆலோசித்து திட்டமிட்டு ஒன்றிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டங்களின் அடிப்படையில் இதுவரை அடைந்துள்ள வெற்றிகள் அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளன.
கிழக்கு லடாக்கில் நிலுவையில் உள்ள வடக்கு எல்லை உள்ளிட்ட மற்ற விவகாரங்களுக்கும் தீா்வு காணப்பட வேண்டும். இதுதொடா்பாக இந்திய தரப்பு திட்டங்கள் தயாராக உள்ளன. பேச்சுவாா்த்தைக்கும் இந்தியா தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.