அனைவருக்கும் நிவாரணம்

20.01.2025 09:06:13

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

களுத்துறை - ஹொரணையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வரவிருக்கும் பருவமழைக் காலத்திற்காக அரிசி கையிருப்புகளை பராமரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், மேலும் அரிசிக்கு  பற்றாக்குறை ஏற்படாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,  “அரிசி பற்றாக்குறை ஏற்பட்டதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையில் மீண்டும் இதுபோன்ற ஒரு சிதைந்த சந்தை உருவாக தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும்  உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு, இந்த பெருபோகத்தில் தனியார் துறையிடம் மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் கைகளிலும் நெல் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்க அவர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில், முதியோர், சிறுநீரக நோயாளிகள், அரசு ஊழியர் சம்பளம், மஹாபொல கொடுப்பனவு மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் ஒரு குறிப்பிட்ட தொகையால் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், 2022-2023 போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை உறுதி செய்துள்ளோம்." என்றார்.