தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாபஸ்

15.10.2021 14:14:53

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அதி குற்றச்சாட்டுப் பத்திரத்தை மீளப்பெற தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கொழும்பு  மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பிரதிவாதியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு எதிராக அதிகுற்றச் சாட்டுப் பத்திரம்  தாக்கல் செய்ய்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு சட்டமா அதிபர் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு கோரி, கரன்னாகொடவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, இந்த வழக்கில் பிரதிவாதியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரான முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான அதி குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் வாபஸ்பெற தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச வழக்குரைஞர் அவந்தி பெரேரா மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

இது தொடர்பாக மேல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிரேஷ்ட அரச வழக்குரைஞர், நீதிமன்றத்தில் தெரிவித்தையடுத்து,
இந்த மனு மீதான மேலதிக பரிசீலனை வரும்  நவம்பர் 03 ஆம் திகதியை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.