பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு பற்றி அறிக்கை கோரப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் தேர்தலில் போட்டியிட்ட சுமார் 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மாத்திரமே அவற்றை ஒப்படைத்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் சார்பில் 690 குழுக்களின் சார்பில் 106 பேர் மாத்திரமே அவற்றை ஒப்படைத்துள்ளனர்.
அதேபோன்று தேசிய பட்டியிலிருந்த 527 பேரில் 57 பேர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளனர். இதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதனை நீடிக்க முடியாது.
எனவே கால அவகாசம் நிறைவடைவதற்குள் அவற்றை சமர்ப்பிக்குமாறு சகல வேட்பாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
மாறாக வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் கீழ் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட தேர்தல் செயலகங்களில் அவற்றை கையளிக்க முடியும் என்பதோடு, பதிவு தபாலிலும் அனுப்பி வைக்க முடியும். பாராளுமன்றத்துக்கு தெரிவானர்கள் மாத்திரமின்றி, வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் இதனை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
இதனுடன் தொடர்புபடுத்தி ஏதேனும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், குறித்த வேட்பாளருக்கு உத்தேச உள்ளுராட்சிமன்றத் தேர்தலிலோ அல்லது மாகாணசபைத் தேர்தலிலோ போட்டியிட முடியாமல் போவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர், நீதிமன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
|