அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்.

27.05.2025 08:02:14

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை  அதிகரித்து வரும்  நிலையில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

 

தனது ஈரான் பயணத்தின் போது, காஷ்மீர், பயங்கரவாதம், நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட ‘அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க’ இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக ஈரான் ஜனாதிபதி  மசூத் பெஷேஷ்கியனுடன் தெஹ்ரானில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘காஷ்மீர் பிரச்சினை மற்றும் நீர் பிரச்சினை உட்பட அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம், மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து நமது அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்.

 

‘சமாதான முன்மொழிவு’ ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்கள் (இந்தியா) ‘உண்மையிலேயே அமைதியை தீவிரமாகவும் உண்மையாகவும் விரும்புகிறார்கள்’ என்பதைக் காண்பிப்பார்கள். இந்தியாவுடனான மோதலில் இருந்து எங்கள் நாடு ‘வெற்றி’ அடைந்தது’ எனத் தெரிவித்துள்ளார் .

இதற்கிடையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த சூழலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனியும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் குறித்து உரையாற்றுகையில், ‘பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல்கள் நிறுத்தப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.