அ.தி.மு.க முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் போட்டியிட இருப்பதாக அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களைக் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.
இராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும் விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகமும் அ.தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை தனித் தொகுதியில் எம்.எல்.ஏ.தேன்மொழி போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 11 பேர் கொண்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் இறுதிவடிவம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர். கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை), கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன்அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தொகுதி பங்கீடு முடிந்ததும், முழு அளவிலான வேட்பாளர்கள் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.வுடன் இழுபறி நீடித்துவரும் நிலையில், தே.மு.தி.க.வில் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் விருப்ப மனுவை அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.