இனவாதம், மதவாதத்திற்கு இனி இடமில்லை.

08.11.2026 15:47:57

இலங்கையில் மீண்டும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், இன்று (08) காலை யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மண்டைதீவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தையும் பார்வையிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தென்மராட்சி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

இதன்போது, நாட்டில் தற்போது மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியே காணப்படுவதாகவும், நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான திட்டமோ தொலைநோக்குப் பார்வையோ எதிர்க்கட்சியினரிடம் இல்லை என்றும் அமைச்சர் விமர்சித்தார்.

 

எதிர்க்கட்சியினர் இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேர்கர் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்தே இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

எனவே, நாட்டில் மீண்டும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இடமளிக்க முடியாது எனவும், அதற்கான வாய்ப்பு இனிமேல் கிடைக்கப்போவதில்லை என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும், தற்போதைய சூழலில் எதிர்க்கட்சியினரால் அரசாங்கத்திற்கு எவ்வித சவாலும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மண்டைதீவு சர்வதேச துடுப்பாட்ட மைதானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

இதேவேளை, யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

 

மைதான நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு நேரில் விஜயம் செய்த அவர், திட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

 

இதன்போது, சுற்றுச்சூழல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட சுமார் 10 அரச நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய அனைத்து அனுமதிகளும் தற்போது கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

சமூக வலைத்தளங்களில் குறித்த மைதானம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், இது சாதாரண விளையாட்டு மைதானமாக அன்றி சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதானமாக நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

குறிப்பாக, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியங்களைக் குறைக்கும் வகையில் மைதானத்தின் நிலமட்டத்தை உயர்த்தி நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதற்கமைய, தற்போதைய நிலமட்டத்திலிருந்து மேலும் மூன்று முதல் நான்கு அடி வரை மண் நிரப்பி, நிலத்தை உரிய முறையில் செப்பனிட்ட பின்னரே அடுத்தகட்ட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தை எவ்வித தாமதங்களுமின்றி நிறைவு செய்து, இன்னும் ஓராண்டுக்குள் மைதானத்தை முழுமையாகப் பூர்த்தி செய்வதே இலக்காக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

பல்வேறு இடர்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த மைதானத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை, வடக்கு மாகாண இளைஞர்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குமான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது