மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல்

25.03.2024 07:49:23

போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ.க. மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அத்துடன், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி வகித்து வருவதுடன், அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், குறித்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

எனினும், அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே தீர்மானித்துள்ளதனால் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணியில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.