டேனில் மெட்வேடவ்- கமிலா ஜியோர்கி சம்பியன் !

16.08.2021 11:50:01

தேசிய வங்கி பகிரங்க டென்னிஸ் தொடரில், ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனில் மெட்வேடவ் மற்றும் இத்தாலியின் கமிலா ஜியோர்கி ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற, தேசிய வங்கி பகிரங்க டென்னிஸ் தொடரில் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
கடினத் தரையில் நடைபெற்ற இத்தொடர், கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று வரை நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனில் மெட்வேடவ், அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்காவுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனில் மெட்வேடவ், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.

இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் இத்தாலியின் கமிலா ஜியோர்கியும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று கமிலா ஜியோர்கி சம்பியன் பட்டத்தை வென்றார்.