நாட்டின் கல்வி முறையில் மாற்றம் அவசியம் - சுசில் பிரேமஜயந்த

10.07.2023 21:18:37

நாட்டின் கல்வி முறையானது கல்வி ரீதியாக மாற்றமடைவதாகவும், இருபத்தியோராம் நூற்றாண்டிற்குத் தயாராகும் மாணவர்களை உருவாக்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

“ஒரு நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை” எனும் தொனிப்பொருளில் அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த நோக்கத்திற்காக மனித வளங்கள் நிர்வகிக்கப்படும் என்றும், நிலையான மற்றும் உயர்தர கல்வியை உருவாக்குவதற்காக உலகளாவிய தரத்திற்கு ஏற்ப கல்வி மறுவடிவமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், நிதி நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுரக்ஷா சிசு ரக்ஷனய’ காப்புறுதித் திட்டம் 2024 இல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வளர்ந்த நாடுகளின் கல்வி முறை

இதுதொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “வளர்ந்த நாடுகளில், கல்வி அமைச்சு மத்திய அரசிடமிருந்து தனி நிறுவனமாக செயல்படுகிறது மற்றும் கல்வி அமைச்சுக்கு மாகாண அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்கிறார்.

இந்தக் கல்வி முறையின் விளைவாக இந்தியா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைகளின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கல்வி அமைச்சு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நம் நாட்டில் உள்ள 399 பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் மாகாண கல்வி அமைச்சுக்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

கல்வி துறையில் மாற்றம்

1,000 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கான முயற்சி 2001 இல் ஆரம்பிக்கப்பட்டது.

13வது அரசியலமைப்பு திருத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது, இந்த நாட்டில் 17 தேசிய பாடசாலைகள் இருந்தன.

அரசியல் முயற்சிகள் அல்லது தனிப்பட்ட கல்வி அமைச்சர்களின் கோரிக்கைகளின் விளைவாக, தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையில் வியத்தகு உயர்வு ஏற்பட்டது. இருப்பினும், அது உயர்தர கல்விக்கு வழிவகுத்தது என்று சொல்ல முடியாது.

28 தேசிய பாடசாலைகள் ஒரே இரவில் உருவாக்கப்பட்ட ஒரு காலகட்டம் இருந்தது. ஆனால், தற்போது கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

தேர்வு மையக் கல்வி முறைக்குப் பதிலாக மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையில் மாணவர்களை சீரமைக்க வேண்டும்” என்றார்.