வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை!

30.05.2024 09:18:59

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

 

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை எனும் தலைப்பில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை மேலும் ஊக்குவிக்கும் விரிவான திட்டம் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, உள்நாட்டு நிபுணத்துவத்தைப் பெறுவதில் சிரமங்கள் இருப்பதாகவும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நிலைபேறான மற்றும் போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இதில் முக்கிய பங்களிப்பை ஆற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மின்சார மறுசீரமைப்பு சட்டமூலம் மற்றும் காலநிலை மாற்ற சட்டமூலம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக செயற்படும் இலங்கை புதிய பொருளாதார கட்டமைப்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பசுமைப் பொருளாதாரமாக மாறுவதே எமது நோக்கமாக உள்ளதுடன், அதிக போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக அது இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையின் உலர் வலயப் பிரதேசத்தில் காற்றாலை வலுசக்தி உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளுடன், அத்துறையில் விரைவான அபிவிருத்தியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பிற்கு இணங்குவதுடன், 2040 ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.