நாடே இல்லாமல் போய்விடும்!
ரணில் எச்சரிக்கை
"என்னை போ போ என்று சொல்லவேண்டாம், இதனால் இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும் ஆபத்து ஏற்படப் போகிறது" என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டிக்கு விஜயம் செய்த அதிபர் ரணில் விக்ரமசிங்க கண்டி தலதா மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
"என்னை வீட்டுக்கு செல்ல வேண்டி போராட்டம் நடத்த வேண்டாம், எனக்கு வீடு இல்லை முடியுமானால் எனது வீட்டை கட்டித்தாருங்கள் இல்லை என்றால் நாட்டை கட்டி எழுப்புங்கள் இரண்டையும் செய்யாது என்னை போ போ என்று சொல்லவேண்டாம், இதனால் இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும் ஆபத்து ஏற்படப் போகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன, இதன் விளைவாகவே நான் இன்று அதிபராக தெரிவாகி உள்ளேன்.
நான் அதிபர் ஆனாலும் இன்னும் நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீரவில்லை, நம் நாட்டில் உருவாகி இருக்கும் பொருளாதார நெருக்கடி இன்னும் நீடிக்குமானால் இந்த நாடு இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது" எனவும் சுட்டிக்காட்டினார்.
நாளைய சமுதாயத்திற்கு நாடு இல்லாமல் போய்விடும்
நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம், தீர்வுகளை காண முற்பட்டுள்ளோம், நாட்டின் இன்றைய நிலைக்கு பல்வேறு விதமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன எனினும் தற்போது இவற்றைக் குறித்து வாதாடி கொண்டிருக்கப்போகின்றோமா? இல்லையெனில் இதற்கான தீர்வுகளை பெறப்போகின்றோமா? எனவும் கேள்வியெழுப்பினார்
ஜூலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர் நாணய நிதியத்தின் உதவியை பெறுவதே எனது நோக்கமாக இருந்தது எனினும் அது ஓகஸ்ட் வரை அது தள்ளிப் போயுள்ளது.
இன்று நாம் இந்த சவாலை பொறுப்பேற்கா விட்டால் நாளைய சமுதாயத்திற்கு நாடு இல்லாமல் போய்விடும். அனைவரும் சவால்களுக்கு முகம் கொடுத்து அதில் இருந்து வெளியே வரவேண்டும், பொறுப்புகளை ஏற்க வேண்டும், அமைதியாக இருந்தது போதும் அனைவரும் வேலைகளை செய்ய ஆரம்பிப்போம், நம் மக்களுக்கு நமது பிரச்சனைகளை எடுத்துச் செல்ல வேண்டும், அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்