மயிலத்தமடு- மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்.
|
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் இனவாத பிரச்சினையல்ல. வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களுடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.இதற்கு இனவாத சாயம் பூச முயற்சிப்பது தவறான செயற்பாடாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். |
|
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புலம்பெயர் தமிழர்கள் நிதி வசதியுடன் வாழ்கிறார்கள். அவர்களை இந்த நாட்டுக்கு அழைத்து உற்பத்திகளை அதிகரிப்பதற்கான உபாயங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளை அமைக்க வேண்டிய தேவைகள் உள்ளன. கைத்தொழில் பொருளாதாரம் முன்னேற வேண்டுமாயின் ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிக்க வேண்டும். அத்துடன் தேசிய ஒற்றுமையுடன் இன மத பேதமின்றி அனைவரும் ஐக்கியமாக வேண்டிய தேவையுள்ளது. அந்த அடிப்படையில் தேசிய இனப் பிரச்சினையை தீர்த்து முறையான அதிகார பகிர்வை ஏற்படுத்துவதன் ஊடாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலமும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கப்பூரில் ஜனாதிபதியாக இருந்த லீக்குவான்யூ அங்கிருந்த சீன, மலே, தமிழர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களுக்கும் சம உரிமை வழங்கியே அந்த நாட்டை வளர்த்துள்ளார். ஆனால் இங்கு இனவாதம், மதவாதம் மற்றும் அடிப்படை வாதம் காணப்படுவதால் தேசிய ஒற்றுமை குழம்பியுள்ளதால் இந்தநாடு வங்குரோத்தடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பில் பல தடவை பேசியுள்ளோம். ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளோம். அமைச்சர்களிடமும் இந்த விடயங்கள் தொடர்பில் கூறியுள்ளோம். இது இனவாத பிரச்சினையல்ல. வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். தற்சார்பு பொருளாதார அடிப்படையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் தொடர்பான மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களுடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இந்த பிரச்சினை தொடர்பில் பேசும் போது இனவாதம் மற்றும் மதவாத சாயம் பூச முற்படுவது பிழையான அணுகுமுறையாகும். அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிடும் போது இதனை இனவாத ரீதியில் குறிப்பிட்டது போன்றே தெரிந்தது. ஆனால் இது வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினையாகவே உள்ளது.சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அங்கு சட்டவிரோதமாக பயிர்செய்வதுடன், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்துள்ளதுடன், அவர்கள் மாடுகள் மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றது. அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. நாங்கள் மட்டக்களப்பில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினோம். இந்தப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். எங்களுக்குள்ள இடைவெளியை நீங்கள் அதிகரிக்கின்றீர்கள். இந்தப் பிரச்சினை மிகவும் பூதாகரமாக மாறியுள்ளது. இதனை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். அந்த பண்ணையாளர்களை வாழ விடுங்கள். இதற்கான தீர்வை வழங்குங்கள். இல்லையென்றால் மக்கள் விரும்பும் போராட்டத்தை தொடர வேண்டிவரும் என்றார் |