பழைய முறைமை சிக்கலானது’
மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்தினால், நிர்வாகக் கட்டமைப்பில் பல சிக்கல்கள் ஏற்படும். ஊழல் மிக்க அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் விருப்பு வாக்கு முறைமையை மாற்றியமைக்கவும் முடியாத நிலை ஏற்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற பிரதமரிடத்திலான வினாநேரத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
“மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு, அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுடன் தேர்தலை நடத்தினால், நிர்வாகக் கட்டமைப்பு பாதிக்கப்படும்; அதன் தாக்கம் மக்களையே சென்றடையும்.
மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தினால், தொகுதிக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியாது. பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்க முடியாது. அதேபோல், ஊழல் மிக்க அரசியல் முறைமைக்கு ஏதுவாக அமையும் விருப்பு வாக்கு முறைமையையும் மாற்றியமைக்க முடியாது.
கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் இரண்டு தேர்தல்களை நடத்தியுள்ளோம். தேர்தலைக் கண்டு அச்சமடைய வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது. தேர்தல் முறைமை பற்றி ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.”
இதேவேளை, “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகவாதியா இல்லையா?” என்று அக்கட்சியின் உறுப்பினரான ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு, “இந்தக் கேள்விக்கான பதிலை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தமது கட்சியின் தலைவர் எவ்வாறான கொள்கையுடையவர் என்பதை ரவி கருணாநாயக்கவே தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கேள்விக்கு நான் பதிலளிப்பது முறையற்றது” என்று பிரதமர் பதிலளித்தார்.