அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்.

11.08.2025 09:07:00

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று அந் நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (11) தெரிவித்தார்.

பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் கனடாவின் இதேபோன்ற அறிவிப்புகளுக்குப் பின்னர் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் அண்மைய நடவடிக்கை இதுவாகும்.

“இரு நாடுகள் தீர்வு, காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றிற்கான சர்வதேச உந்துதலுக்கு பங்களிக்கும் வகையில்,  எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்” என்று அல்பானீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அல்பானீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், கான்பெராவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அவுஸ்திரேலியா பாலஸ்தீன அதிகாரசபையிடமிருந்து பெற்ற உறுதிமொழிகளின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், இஸ்லாமிய போராளிக் குழுவான ஹமாஸ் எந்த எதிர்கால அரசியல் பங்களிப்பிலும் ஈடுபடக் கூடாது என்றும் கூறினார்.

கடந்த வாரம் அவுஸ்திரேலியா, இஸ்ரேல் காசாவை இராணுவக் கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டத்தை விமர்சித்தது.

மேலும், சர்வதேச சமூகத்தின் அழைப்புகளை நெதன்யாகு புறக்கணித்ததாலும், காசாவில் சட்ட மற்றும் நெறிமுறைக் கடமைகளுக்கு இணங்கத் தவறியதாலும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் முடிவு “மேலும் கட்டாயப்படுத்தப்பட்டது” என்று அல்பானீஸ் கூறினார்.

இதனிடையே, நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் திங்களன்று, “பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து அடுத்த மாதத்தில் வெலிங்டன் தனது நிலைப்பாட்டை கவனமாக பரிசீலிக்கும்” என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.