6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சி தேர்தல் நடத்த திமுக திட்டம்.
2026 சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தனது கட்சி அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சுமார் 6 லட்சம் கட்சி பதவிகளுக்கான உள்கட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 110 மாவட்டங்களாக கட்சி அமைப்பு மாற்றப்பட்டுள்ள நிலையில், வார்டு செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக 38 வருவாய் மாவட்டங்களுக்கு தலா இரண்டு பார்வையாளர்கள் என 76 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மாவட்டங்களுக்கு சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை, கட்சி எல்லைகள் பிரிப்பு உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர். அதன்பிறகு டிசம்பர் அல்லது ஜனவரியில் உள்கட்சித் தேர்தல் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
திமுகவின் அமைப்பில் பல முக்கிய மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 76 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர செயலாளர் பதவி நீக்கப்படுவதுடன், கிளைச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகர மற்றும் ஒன்றிய செயலாளர் பதவிகளில் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே தொடர முடியும் என்ற புதிய விதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற உள்கட்சித் தேர்தலுக்கு பிறகு, தற்போது நடைபெறவுள்ள தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உண்மையான கள செல்வாக்கு கொண்ட நிர்வாகிகளை அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அமைப்பு ரீதியாக திமுக எடுக்கும் இந்த மாற்றங்கள், கட்சியை மீண்டும் அடிமட்டத்தில் வலுப்படுத்துமா என்பதே அரசியல் வட்டாரத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.