அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே புதிய சட்டம்!

03.11.2026 09:12:00

அரசாங்கம் பயங்கவாத தடைச்சட்டத்தை இல்லாமலாக்குவதாக தெரிவித்து, அந்த சட்டத்தில் இருக்கும் அனைத்து விடயங்களையும் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தில் சேர்த்திருக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

தொழிற்சங்கம் மற்றும் தொழில் வல்லுனர்களின் தேசிய சம்மேளனம் திங்கட்கிழமை (02) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.

பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டத்தை அனுமதித்துக்கொள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. ஏனெனில் தற்போதும் நாட்டில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்தே போராட்டம் மேற்கொண்டது. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித்த ஹேரத், வசந்த சமரசிங்க,பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட பலர் அன்று வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் கூடாது என தெரிவித்தவர்கள் எவ்வாறு பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டத்தை கொண்டுவர முடியும்?

ஆட்சியாளர்களுக்கு வெட்க உணர்வு இல்லாமை மற்றும் பொய் கூறுவது சாதாரணமாகி இருப்பதால், பயங்கரவாத தடைச்சட்டத்தைவிட பயங்கரமான சட்டத்தை தற்போது கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதி விரும்பினால் யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதியாக சித்திரிக்கலாம். இவ்வாறு இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை ஆரம்பமாக 2மாதங்கள் தடுத்துவைக்கலாம். அதன் பிறகு படிப்படியாக 2 வருடங்கள் வரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளலாம். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் அதிகமான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் நாட்டில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை பயங்கரவாதியாக பெயரிட ஜனாதிபதிக்கு முடியும். அவ்வாறான தொழிற்சங்கங்களை தடைசெய்யவும் அரசாங்கத்துக்கு முடியும். நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லாத நிலையில் அரசாங்கம் ஏன் இவ்வாறான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என கேட்கிறோம். ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. இரண்டு வருடங்கள் கடந்தும் அந்த வாக்குறுதிகளில் எதனையும் நிறைவேற்ற அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.

அதனால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், தொழிற்சங்கங்கள்,விவசாயிகள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கிறங்கும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. அவ்வாறு அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கிறங்குபவர்களை அடக்குவதற்கே அரசாங்கம் தற்போது பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறது, அதேபோன்று அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலமும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே கொண்டுவருகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருக்கும் அரைவாசிப்பகுதி பயங்கரவாத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டமூலத்திலும் சேர்க்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய அரைவாசி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்திலும் சேர்த்திருக்கிறது என்றார்.