நாட்டின் ஜனநாயகத்திற்கு மாபெரும் சவால் வந்துள்ளது.

07.09.2026 09:03:55

ஆயுத பலத்தால் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்த கட்சி இன்று தற்செயலாக தேர்தலில் வெற்றிபெற்று ஜனநாயகத்தை அழித்து வருகிறது. இந்த வேளையில் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கி மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

  

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (6) வெளியிட்ட விசேட வீடியோ பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று நாட்டின் ஜனநாயகத்திற்கு மாபெரும் சவால் வந்துள்ளதாக நான் நினைக்கிறேன். சட்டமன்றம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறையின் அதிகாரச் சமநிலை இழக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றத்தின் அதிகாரம் ஒரு கட்சிக்குச் செல்லும் போது ஜனநாயகத்தைப் பாதுகாத்தது நீதித்துறையாகும்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதித்துறையின் சுயாதீனம், நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கச் செயற்படுகின்றனர். ஆயுத பலத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றச் சென்ற ஒரு கட்சி இன்று தற்செயலாகத் தேர்தலில் வெற்றிபெற்று வந்து ஜனநாயகத்தை அழிக்கிறது.

இந்த வேளையில் அனைவரும் ஒன்றிணைந்து அன்று ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரத்தைப் பெறச் செயற்பட்ட விதத்தில் செயற்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தோம். ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான கொள்கைகள் நமது கொள்கைகளே. நானும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே அரசியலை ஆரம்பித்து இன்று ஐக்கிய மககள் சக்தியில் செயற்படுகிறேன்.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியுமம் ஒன்றிணைய வேண்டும் என்றே நான் கூறுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கு நமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, டி. பி. ஜாயா, சுந்தரலிங்கம் போன்ற தேசப்பற்றுள்ள மக்கள் தலைவர்கள் பலருடன் ஒன்றிணைந்தே டி. எஸ். சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை 80 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தார்.

இந்த ஒன்றிணைப்பின் மூலம் நாட்டையும் தேசத்தையும் நேசிக்கும் ஒரு கட்சியை உருவாக்குவதற்கு மகாமான்னிய டி. எஸ். சேநாயக்கவிற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அக்கட்சி பல தசாப்தங்களாக ஆற்றிய சேவையை 80 ஆவது ஆண்டு நிறைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நான் பாராாட்ட விரும்புகிறேன்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட தலைமையை நமக்குக் காட்டுவது ரணில் விக்ரமசிங்க ஆவார். நாடு வங்குராேத்தாகி டொலர் இல்லாதிருந்த சந்தர்ப்பத்தில், மக்களுக்கு எரிவாயு, எரிபொருள் பெற முடியாமல் இருந்த போது, அனைவரும் நிராகரித்த போது அவர் இந்நாட்டின் தலைமையை ஏற்றுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் பயணத்தைப் பற்றி யோசிக்காமல் பல கடினமான தீர்மானங்களை எடுத்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக பெரும் முயற்சியை மேற்கொண்டார். அந்த வீழ்ச்சியடைந்த பொருளாதார நிலையிலிருந்து மேலே உயர்த்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்து திறைசேரியில் சுமார் 6 பில்லியன் டொலர்களைச் சேமித்தார். அத்தகைய ஒரு நாட்டையே அவர் தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.

அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஆற்றிய அந்த சேவையை நாம் கட்சி பேதமின்றி பாராட்டுவதாக இந்த 80 வது ஆண்டு நிறைவில் தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.