2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 19.4 விகிதமானவற்றையே இலங்கை நிறைவு செய்துள்ளது
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 இல் உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கத்தின் முன்னேற்றம் குறித்து வெரிடே ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தீர்மானத்தின் 30/1 இன் கீழ் அமுல்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகளில் 19.4 விகிதமானவற்றையே இலங்கை நிறைவு செய்துள்ளதாகவும் எட்டு வருடங்களாக இலங்கையின் இணை அனுசரணையுடன் வழங்கப்பட்ட தீர்மானத்தின் 61.1% உறுதிப்பாடுகள் மோசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்மானத்தில் உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி, நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் இராணுவமயமாக்கல், சர்வதேச ஈடுபாடு, மற்றும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
இருப்பினும் நீதி செயல்முறை, காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவுதல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட்டு உறுதிப்படுத்துதல், வலிந்து காணாமல் போதல்களை குற்றமாக்குதல், இலங்கை அரசாங்கத்திற்கும் ஐ.ந.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடனான ஈடுபாடு என்பனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
முந்தைய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட ஏழு உறுதிமொழிகள் ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் பொதுமக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு மீட்டமைத்தல், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் ஆய்வாளர்கள், மத சிறுபான்மையினர் மற்றும் சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல்களை விசாரிக்கவும், இந்தத் தாக்குதல்களின் குற்றவாளிகளை தண்டிப்பது மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் மோசமான முன்னேற்றத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களை விசாரிப்பதற்கு, சிறப்பு ஆலோசகர் மற்றும் வெளிநாட்டு பங்கேற்புடன் நீதித்துறை பொறிமுறையை அமைப்பதற்கான உறுதிமொழிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என வெரிடே ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.