உலக அளவில் யுபிஐ பண பரிவர்த்தனை வசதி.

09.09.2026 08:27:06

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதிசார் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் யுபிஐ பணப் பரிவர்த்தனை வசதியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக நாட்டின் வளர்ச்சி வேகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக முன்னோக்கிச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

வங்கி சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டுவரும் இலக்கு சாத்தியமற்றது என்று பலரும் கருதினர். ஆனால், கோடிக்கணக்கான மக்கள் தற்போது இந்தியாவின் நிதிசார் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2,400 கோடிக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்று சாதனை படைத்துள்ளன. தற்போது இந்தியாவில் இருந்து 11 நாடுகளுக்கு யுபிஐ வசதி விரிவுபடுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு பணம் அனுப்பும் இந்தியர்களின் பரிவர்த்தனை செலவுகளை குறைக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். யுபிஐ வசதி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பணத்தை சேமிக்கவும், விரைவாக குடும்பங்களை சென்றடையவும் பெரிதும் உதவும். 

 

சர்வதேச அளவில் இந்த சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கு நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் இந்த டிஜிட்டல் புரட்சி உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.