இந்திய வம்சாவளி சீக்கியர் மீதான தாக்குதல் அமெரிக்க அரசு வருத்தம்

10.01.2022 08:14:18

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திற்கு வெளியே சீக்கிய டிரைவர் மீது நடந்த தாக்குதலுக்கு, அந்நாட்டு வெளியுறவுத் துறை வருத்தம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய டாக்சி டிரைவரை, அடையாளம் தெரியாத நபர் சமீபத்தில் தாக்கிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த மர்ம நபர், சீக்கியரின் தலையில் இருந்த 'டர்பன்' எனும் தலைப்பாகையை அகற்ற முயற்சிப்பதுடன், அவர் மீது வெடி பொருட்களையும் வீசி உள்ளார்.

இது தொடர்பாக இந்திய துாதரக அதிகாரிகள், அமெரிக்க அரசிடம் கவலை தெரிவித்தனர். இதையடுத்து இந்த செயலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை வருத்தம் தெரிவித்துஉள்ளது. மேலும் இதுபோன்ற வெறுப்பு அடிப்படையிலான வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சகம், 'இந்த வகை செயல்களில் ஈடுபடுவோர் கண்டிப்பாக அவற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது.