
இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலை விவகாரம்:.
சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யக்கட்டதாக கூறப்படும் இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான முறைப்பாடு குறித்து சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கேள்வி எழுப்பியுள்ளார்.
தம்மால் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும், அது தொடர்பான எழுத்துமூல பதிலை எதிர்பார்ப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் பதில் காவல்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்திலேயே அவர் மேற்கண்ட விடயங்களை கூறியுள்ளார்.
இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன்
இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தாம் முறைப்பாடு செய்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரையில் எவ்வித முறையான பதிலும் தனக்குக் கிடைக்கவில்லை என, சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தமது கோரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்று, 7 வேலை நாட்களுக்குள் பதிலை எதிர்பார்ப்பதாகவும், பதில் காவல்துறை மாஅதிபருக்கு அவர் கோரிக்கை சமர்ப்பித்துள்ளார்.
தனது முறைப்பாடு தொடர்பில் கோப்பு இலக்கம் மாத்திரமே இதுவரையில் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி, பதிலைப் பொறுத்து தாம் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காவல்துறை நடவடிக்கை
சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே, காவல்துறையினரால் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் மனித உரிமை நிறுவனங்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படும் என தனது கோரிக்கை கடிதத்தில் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.