தமிழர்களை தேசிய இனமாக கருதி அரசியல் தீர்வை முன்வைக்க முடியுமா?
|
1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலை என்பது சாதாரணமானதல்ல. இதுபோன்று தமிழ் மக்களுக்கு எதிரான பல இனப்படுகொலைகள் நடந்துள்ளன. எனவே இந்த இனப்படுகொலைகள் தொடர்பாக ஒரு விசாரணைக்குழுவை அமைத்து நீதி பெற்றுத்தர முடியுமா? என அரசாங்கத்திடம் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார். |
|
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 43 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மிகவும் கொடூரமான மிகப்பெரிய இனப்படுகொலை திட்டமிட்ட வகையில் அரச ஆதரவுடன் இடம்பெற்றது. வெலிக்கடை சிறைச்சாலை, களுத்துறை சிறைச்சாலை, பிந்துனுவெவ போன்ற சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் கைதிகள் கொல்லப்பட்டார்கள். இதுதான் இலங்கையில் நடந்த முதலாவது இனப்படுகொலையல்ல. 1954ஆம் ஆண்டு அல்லைக் கந்தளாயில் 154 தமிழ் விவசாயிகள் பொலிஸார் முன்னிலையில் சிங்களக் காடையர்களினால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டனர் .1956ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் 26000 தமிழ் குடும்பங்கள் விரட்டப்பட்டார்கள் பலர் கொலைசெய்யப்பட்டார்கள். முன்னாள் அமைச்சர்களான லலித் அத்துலத் முதலி , காமினி திஸாநாயக்க, சிறில் மத்யூ போன்ற ஐக்கியதேசியக்கட்சியில் கோலோச்சியவர்கள் அப்போதைய ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனவின் வழிநடத்தலுடன் மிகவும் கொடூரமான படுகொலைகளை இந்த நாட்டில் செய்தார்கள். 1983 இனப்படுகொலை என்பது சாதாரணமானதல்ல. எனவே தற்போதைய அரசாங்கத்திடம் நான் ஒரு கோரிக்கை விடுகின்றேன் .இந்த இனப்படுகொலைகள் தொடர்பாக ஒரு விசாரணைக்குழுவை அமைத்து உங்களினால் இதற்கு ஒரு நீதி பெற்றுத்தர முடியுமா?உங்கள் அரசாங்கம் பொறுப்பெடுத்து 2 ஆண்டுகள் ஆகின்றன. முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு கூட சர்வதேச விசாரணைக்கு போகக்கூடாது .அதனை நாம் அனுமதிக்கமாட்டோம் என ஜெனீவாவில் அரசாங்கம் பிரேரணைகளை முன்வைத்துள்ளீர்கள். ஆகவே இந்த மண்ணில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலை, வாகரைப் படுகொலை, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கூட நீதியை வழங்க நீங்கள் தயாராக இல்லை. செம்மணியில் இதுவரை 471 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை தமிழர்களுடையவை செம்மணி ஆசியாவின் இரண்டாவு பெரிய மனிதப் புதைகுழியாக இடம்பிடித்துள்ளது. 1983 ஆம் ஆண்டு 13 இராணுவத்தினர் கொல்லப்படடதற்காக மலையகத்தில் 2000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் ஓயாத அலைகள் மூலம் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமை கைப்பற்றியபோது 1000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஒரு தமிழர் கூட கொழும்பிலோ மலையகத்திலோ கொல்லப்படவில்லை. காரணம் தமிழர்கள் பலமாக இருக்கும்போது நீங்கள் மிகவும் யோசனையுடன் இருந்தீர்கள். தமிழர்கள் பலவீனமாக இருந்தபோதுதான் பல் ஆயிரம் தமிழர்களை கொன்றொழித்தார்கள். கொழும்பில், மலையகத்திலிருந்து தமிழர்கள் விரட்டப்பட்டடபோது கப்பலில் ஏற்றி வடக்கிற்கு அனுப்பட்டபோது இந்தியாவும் கப்பல்களை அனுப்பி தமிழர்கள் வடக்கிற்கு கொண்டுவந்தது ஏனெனில் அப்போதே வடக்கு மற்றும் கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம். என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் இன்றும் ஏற்றுக்கொள்கின்றது. ஆளுங்கட்சி 1983 ஜூலை 23 கலவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணை கொண்டு வந்துள்ளது.. 1987 இந்திய -இலங்கை உடன்படிக்கையின்படி வடக்கு, கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தது .அதனை வழக்குப்போட்டு பிரித்தவர்கள் ஜே .வி.பி.யினர்.அதேபோன்று 2004 இல் சுனாமி பொதுக்கட்டமைப்பை வழக்குப்போட்டு நிறுத்தியவர்களும் ஜே .வி.பி.யினர், ஆகவே அரசாங்கத்திலும் குற்றங்கள் உள்ளன. தமிழர்களை ஒரு தேசிய இனமாக கருதி உங்களினால் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க முடியுமா? இல்லை இப்படி தமிழர்களை ஏமாற்றுவதற்கான இவ்வாறான தீர்மானங்களை கொண்டுவந்து மாற்று திசைக்கு கொண்டுபோகபோகின்றீர்களா? எனக்கேள்வி எழுப்பினார். |