விமான நிலையங்கள் மீது தாக்குதல்.

21.10.2026 15:21:18

யேமனில் உள்ள ஏடன் மற்றும் அல் ரய்யான் விமான நிலையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

யேமனின் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல்கள் சிவில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புக்கும், பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

அல் ரய்யான் விமான நிலையம் மீது மூன்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவை அனைத்தும் விமான ஓடுபாதைகளுக்கு அருகில் விழுந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ, காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏடன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறிய அமைச்சகம், ஓமன் மற்றும் கெய்ரோவுக்குப் புறப்பட்ட இரண்டு விமானங்கள் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகும், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த பணியாளர்களை ஏற்றிவந்த விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகும் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அடிஸ் அபாபா மற்றும் கெய்ரோவுக்கான இரண்டு விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதுடன், விமான நிலையத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் செயல்பாட்டு ஆபத்துகள் இருந்தபோதிலும், பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான உதவி விமானங்களுக்காக ஏடன், அல் ரய்யான் விமான நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் யேமன் போக்குவரத்து அமைச்சகம் உறுதியளித்துள்ளது.