
எண்ணெய் வழித்தடங்களை அழித்த உக்ரைன்.
எண்ணெய் வழித்தடங்களை அழித்த உக்ரைன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவில் உள்ள உனேச்சா எண்ணெய் உந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நடத்திய தாக்குதலில் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரண்டு நாடுகளின் துருஷ்பா எண்ணெய் வழித்தட விநியோகங்கள்(Druzhba pipeline) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. |
ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இருநாடுகளும் ரஷ்ய எண்ணெயை அதிகம் நம்பியுள்ள நிலையில் இந்த எண்ணெய் வழித்தடம் தாக்கப்படுவது ஒரே வாரத்தில் 3வது முறையாகும். இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டுள்ளன. துருஷ்பா எண்ணெய் வழித்தடம் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் இதுவரை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை. ஆனால் உக்ரைனின் ஆளில்லா விமான படையின் தலைவர் ராபர்ட் ப்ரோவ்டி, துருஷ்பா எண்ணெய் வழித்தடம் தாக்கி அழிக்கப்பட்டது தொடர்பான காட்சிகளை டெலிகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ராபர்ட் ப்ரோவ்டி, ரஷ்யர்களை வீட்டுக் செல்லுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உக்ரைன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய எத்தகைய அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |