எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கே பயங்கரவாத தடைச்சட்டம்!

30.06.2026 09:06:17

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்துக்கு அதனை நீக்கும் எண்ணம் இல்லை. இந்த வருடத்துக்குள் நீக்குவதாக ஜனாதிபதி தெரிவித்தாலும் எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கு அதனை தொடர்ந்து வைத்திருப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதேநேரம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் எண்ணமும் தற்போதைக்கு அரசாங்கத்துக்கு இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

    

 

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்சிக்கு வந்ததுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவே அரசாங்கம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த வருடத்துக்குள் நீக்குவதாகக் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்திருந்தார். இவ்வாறுதான் நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் நீக்குவதாகக் கூறியிருந்தார்கள். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் சுவையை தற்போது அவர்கள் உணர்கிறார்கள். அதனால் தற்போதைக்கு அதனை நீக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆனால், ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடையும்போது, அடுத்தவருக்குக் கிடைக்கப்போகும் வாய்ப்பைத் தடுப்பதற்காக இதைச் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் கூட, இன்று அந்தப் பயங்கரவாத சட்டத்தின் கீழேயே சுரேஷ் சலேயை கைதுசெய்து தடுத்து வைத்திருக்கிறார்கள். இதுவரை எத்தனை பேரை அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள்? ஜே.ஆர். ஜயவர்தன இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த நாளிலிருந்தே நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அன்றும் எதிர்த்தேன், இன்றும் எதிர்க்கிறேன், என்றும் எதிர்ப்பேன்.

எமது ஆட்சிக் காலத்தில் இதைச் செய்யுமாறு நாங்கள் கூறினோம். அக்காலகட்டத்தில் ஜனாதிபதி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார், அதில் இருந்த பல அடக்குமுறைச் சட்டங்களை நீக்கித்தான் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் தேவையில்லை. ஏனென்றால் வடக்கிலும் தெற்கிலும் இப்போது பயங்கரவாதம் இல்லை. மீண்டும் அப்படி ஏதேனும் ஒன்று வந்தால், நாம் மீண்டும் அந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இப்போது அதை வைத்திருப்பதன் நோக்கம் என்ன? எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கே இதைத் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். அதில் எந்த சட்டமும் இல்லை என்றால், அதனால் எந்த நேரத்திலும் ஒருவரை கைதுசெய்து ஒன்றரை இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைத்துக்கொள்ள முடியும் என்றார்.