துணை இராணுவ தாக்குதலில் 57 போ் உயிரிழப்பு!

12.10.2025 15:22:48

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 57 போ் உயிரிழந்துள்ளனர்.

இதனை அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

 

இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆா்.எஸ்.எஃப் படையால் முற்றுகையிடப்பட்டுள்ள வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உயிரிழந்தவா்களில் 17 சிறுவா்கள், 22 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தாக்குதலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 21 பேர் காயமடைந்ததாக சூடான் உள்நாட்டுப் போரைக் கண்காணிக்கும் மருத்துவ நிபுணர்களின் குழுவான சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் திகதி முதல் போர் நடந்து வருகிறது.

இதில் இலட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகவும் சுமாா் 1.4 கோடி போ் இருப்பிடங்களை விட்டு புலம் பெயா்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.