
கைவிரித்தது அரசாங்கம்!
அரசியலமைப்பு திருத்த பணிகளை விட பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாகும். ஆனால் தற்போது அதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கம் நியமிக்கப்பட்டு குறுகிய காலமே கடந்துள்ளது. நாட்டில் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பாரிய சவால் பொருளாதார சவாலாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான முழு அரசாங்கமும் அந்த சவாலை எதிர்கொள்வதற்கான பணிகளிலேயே ஈடுபட்டுள்ளது. அதற்கும் இன்னும் காலம் செல்லும். இதன் போது ஏற்படக் கூடிய வழமையான பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றையும் முகாமைத்துவம் செய்து வருகின்றோம். பொருளாதாரம் ஓரளவு ஸ்திர நிலைமையை அடைந்ததையடுத்து அரசியலமைப்பு திருத்த பணிகளை முன்னெடுப்போம். அந்த பணிகளையும் நீண்ட நாட்களுக்கு இழுத்துச் செல்ல மாட்டோம். குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளிப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அதற்கமைய நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அனைத்தையும் ஒன்றுடனொன்று பிணைத்துக் கொண்டு அவற்றை வீணடிப்பதற்கு நாம் தயாராக இல்லை. எனினும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கே நாம் முன்னுரிமையளித்துள்ளோம் என்றார். |