2வது டெஸ்டில் தனஞ்சய டி சில்வா ரன் குவிப்பு !

03.12.2021 10:35:00

காலே மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 297 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

காலே மைதானத்தில் நடத்த முதல் டெஸ்ட் போட்டியில், 187 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில், கடந்த நவம்பர் 29ம் திகதி தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் Permaul முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர், முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 253 ரன்கள் எடுத்தது. இலங்கை வீரர் ரமோஷ் மெண்டிஸ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

இதைத்தொடர்ந்து, 2வது இன்னிங்கஸில் களமிறங்கி தடுமாறிய இலங்கை அணியை தனஞ்சய டி சில்வா தனது அற்புதமான பேட்டிங் திறமையால் மீட்டார்.

5வது நாள் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது.

தனஞ்சுய டி சில்வா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 155 ரன்கள் குவித்தார்.

தற்போது, 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிப்பெற்றால் டெஸ்ட் தொடரில் சமனில் முடியும். போட்டி டிரா ஆனாலோ அல்லது இலங்கை அணி வெற்றிப்பெற்றாலோ தொடரை இலங்கை அணி கைப்பற்றும்.