டென்மார்க் ராணுவத்தில் இணைந்த இளவரசி இசபெல்லா!

06.08.2026 08:29:59

அரச குடும்பத்தில் இருந்து ராணுவ சேவையில் ஈடுபடும் முதல் இளவரசி என்ற பெருமையை இசபெல்லா பெற்றுள்ளார். டென்மார்க் நாட்டின் இளவரசி இசபெல்லா(Princess Isabella) தன்னுடைய 11 மாத இராணுவ சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். ஸ்லாகல்ஸ் நகரில் அமைந்துள்ள ஆண்ட்வோர்ஸ்கோவ்(Antvorskov Barracks) பீரங்கி படை தளத்தில் ஆகஸ்ட் 3ம் திகதி 19 வயது இளவரசியான இசபெல்லா தன்னுடைய இராணுவ கடமைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

 

இதன் மூலம் டென்மார்க் அரச குடும்பத்தில் கட்டாய இராணுவ பணியில் ஈடுபடும் முதல் பெண் என்ற பெருமையை இளவரசி இசபெல்லா பெற்றுள்ளார்.

மன்னர் பிரெடெரிக் எக்ஸ் மற்றும் ராணி மேரி ஆகியோரின் மூத்த மகளான இளவரசி இசபெல்லா, தன்னுடைய உயர்நிலைப் பள்ளியை முடித்துவிட்டு கோடைக்கால விடுமுறைக்கு பிறகு நேரடியாக கட்டாய இராணுவ சேவைக்காக இராணுவ முகாமிற்கு வந்து சேர்ந்துள்ளார்.

தன்னுடைய மூத்த சகோதரரும், பட்டத்து இளவரசருமான கிறிஸ்டியன், இராணுவ சேவையை தொடங்கிய அதே ராணுவ முகாமில் இளவரசி இசபெல்லாவும் இணைந்துள்ளார்.

பட்டத்து இளவரசர் கிறிஸ்டியன் இந்த இராணுவ முகாமில் பயிற்சியை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் லெப்டினன்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டென்மார்க் அரச குடும்பத்தில் இராணுவ சேவை என்பது பாரம்பரியமாக கடைபிடித்து வந்தாலும், புதிதாக விரிவாக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் இராணுவ சேவையை நிறைவு செய்யும் முதல் அரச குடும்ப பெண் என்ற பெருமையை இளவரசி இசபெல்லா பெற்றுள்ளார்.

அத்துடன் இளவரசி இசபெல்லா எந்தவொரு ஊதியமும் இல்லாமல் இந்த இராணுவ சேவையை செய்ய தீர்மானித்துள்ளார்.