தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

08.05.2022 11:22:55

திருவாரூரில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது,

கல்வியின் தேவையை உணர்ந்து, கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இவைகள் தொடர்பான 101 மற்றும் 108 அரசாணைகள் குறித்து ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சட்டமன்றம் நிறைவடைந்த பின்னர் அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்து பேசி ஆசிரியர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் திருத்தங்கள் மேற்கொண்டு, அதனை முதல்வர் அனுமதியுடன் விரைவில் வெளியிடுவோம்.

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை செயல்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ரூ.5.75 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையில் இருந்தது. அதை சரி செய்யக்கூடிய முயற்சியில் தமிழக முதல்வர் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நிதி பற்றாக்குறையை சரி செய்யப்பட்ட பின் படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.