அறநிலையத்துறைதான் டார்கெட்?

11.07.2025 14:22:35

தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணத்தை தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவையும், அறநிலையத்துறையையும் கண்டித்து திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவது குறித்து அறநிலையத்துறையை எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதிமுக காலத்திலும் அவ்வாறு கல்லூரிகள் கட்டப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்பட்டது. மேலும் ஆன்மீக அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுப்பதையும், அறநிலையத்துறைக்கு எதிரான கருத்துகளை கூறி வருவதும் பல்வேறு யூகங்களை எழுப்பி வந்தது.

இந்நிலையில் தற்போது ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “திருவண்ணாமலை மாநகரில் அறநிலையத் துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் அலட்சியத்தாலும், ஆமைவேகப் பணிகளினாலும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திண்டாடுகின்றனர். 

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத அறநிலையத் துறையைக் கண்டித்தும், திருவண்ணாமலை மாநகராட்சியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் அரசுத் துறையினரைக் கண்டித்தும், அரசுத் துறைகளின் நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்தும்; பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 16.7.2025 புதன் கிழமை காலை 10 மணியளவில், திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக திமுக அரசு ஆட்சிக்காலத்தில் தொழில்துறை நசிவு, விவசாயம் பாதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்சினைகளையே பேசி வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது எழுச்சிப் பயணம் தொடங்கியது முதலாகவே அறநிலையத்துறை, ஆன்மிக அரசியல் என்று பாதை விலகியிருப்பது போல தோன்றுவதாகவும், இதற்கு பாஜகவுடனான கூட்டணியும் ஒரு காரணமா? என்றும் அரசியல் வட்டாரத்தில் பலவாறாக பேசிக் கொள்ளப்படுகிறது.