சிறிலங்கா விவகாரத்தில் கனடா போல் செயற்பட வேண்டும்

14.01.2023 22:23:00

கனடா பிரித்தானியா உட்பட்ட புலம்பெயர்நாடுகளில் தமிழர்களின் மரபுரிமைத் திங்கள் கடைப்பிடிக்கப்படும் நிலையில் மேற்குலக நாடுகளின் அரசியல் தலைவர்களின் வாழ்த்துச்செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பிரித்தானிய அரசியல் பிரமுகர்களின் வாழ்த்துச்செய்தியின் வரிசையில் எதிர்க்கட்சித்தலைவர் சேர்.கெயார் ஸ்ராமரின் வாழ்த்துச்செய்திவந்துள்ளது.

பிரித்தானியாவிலும், ஏனைய நாடுகளிலும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள கெயார் ஸ்ராமர், உறவுகளை புதுப்பிப்பது மற்றும் சமூகமாக ஒன்றுபடும் பண்புகளுக்குரிய தருணம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ்ச் சமூகம்

அத்துடன் பிரித்தானியாவுக்கு தமிழ்ச் சமூகம் வழங்கும் பெரும்பங்களிப்புக்கு பெரும்நன்றியைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்கும், சமாதானத்திற்கும், நீதிக்கும் தமிழ் மக்கள் புரிந்த தியாகங்களை நினைவூட்டிக் கொள்வதற்கான தருணமும் இதுவே எனக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள், தமிழர்கள் எதிர்நோக்கும் துன்பங்கள், அரசியல்உறுதிநிலையின்மை ஆகிய விடயங்களில் தான் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கெயார் ஸ்ராமர், மனிதஉரிமைகளையும், நீதியையும் வலியுறுத்தும் தமிழ்ச் சமூகத்தோடு தொழிற்கட்சி தொடர்ந்து பணியாற்றும் எனவும் உறுதி வழங்கியுள்ளார்.

இலங்கையில் நீதியையும், பொறுப்புக் கூறலையும் நிலைநாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இனியும் சிறிலங்கா அரசாங்கம் காலம்தாழ்த்தமுடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய நிதர்சனமான பொறுப்பு பிரித்தானிய அரசாங்கத்திற்கு உண்டெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கனடா போல் செயற்பட வேண்டும்

இந்த நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் சேர் கெயார் ஸ்ராமரின் வாழ்த்துச்செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழ் அமைப்பின் தலைவர் சென் கந்தையா, சுயநிர்ணய உரிமைக்காவும், நீதிக்காகவும் தமிழ் மக்கள் புரிந்த தியாகங்களை அங்கீகரித்து, தொழிற் கட்சித் தலைவர் விடுத்திருக்கும் செய்தியை தமது அமைப்பு வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அதிபர்கள் உட்பட்ட அரசியல் மற்றும் ராணுவ முகங்களுக்கு கனடா விதித்த தடையைப்போல சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மீது பிரித்தானிய அரசாங்கமும் தடைவிதிக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.