'எனக்கு தெரியாது' - மறுத்த நயினார் நாகேந்திரன்!
|
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்ற தகவல் நேற்று வெளியாகி இருந்தது. என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 132 மாவட்டச் செயலாளர்களில் 120 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 90க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடலாம் என்றும், மீதமுள்ள மாவட்டச் செயலாளர்கள் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. |
|
இறுதியில் கூட்டணி அமைத்தாலும், தனித்துப் போட்டியிட்டாலும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவிப்பதாக மாவட்டச் செயலாளர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வரும் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று மாலை (14-03-26) விஜய் டெல்லி செல்ல உள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ''தவெக விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருகிறாரா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. விஜய் எதற்கு டெல்லி செல்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். விஜய் டெல்லி செல்வது கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, அதற்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை. மேலும் விஜய் குறித்து கருத்து கூற விரும்பவில்லை'' என்றார். |