மொசாட்டிடம் 10 இலட்சம் டொலர் கேட்ட ஜே.ஆர்!

18.03.2026 14:18:00

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' இடமிருந்து 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாகக் கோரினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் இரகசிய ஆவணங்கள் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 'த வயர்' இணையத்தளம் வெளியிட்டுள்ள புலனாய்வுக் கட்டுரையில் இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 14 ஆகிய திகதிகளில் பரிமாறப்பட்ட இரகசியத் தகவல்களின்படி, மொசாட் பிரதிநிதி ஒருவருடனான சந்திப்பின் போதே ஜே.ஆர். ஜயவர்தன இந்த நிதியைக் கோரியுள்ளார். அப்போது கொழும்பிலுள்ள இஸ்ரேலிய நலன்புரிப் பிரிவை மூடுமாறு அரபு நாடுகள் மற்றும் உள்ளூர் எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு பலத்த அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. ஜே.ஆரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவது இஸ்ரேலின் மூலோபாய நலன்களுக்கு அவசியமாக இருந்ததாக அந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

1970களில் அரபு நாடுகளின் அழுத்தத்தால் இஸ்ரேலுடனான உறவைத் துண்டித்திருந்த இலங்கை, 1984களில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தபோது மீண்டும் இரகசிய உறவைப் பேணியது. 1980களின் பிற்பகுதியில் சுமார் 30 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் துவோரா ரக வேகப்பந்துப் படகுகள், மினி-உசி இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் இலத்திரனியல் வேலிகள் மற்றும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் அடங்குகின்றன.

இஸ்ரேலியப் பயிற்சியாளர்கள் 'விவசாய ஆலோசகர்கள்' என்ற போர்வையில் இலங்கைப் படையினருக்கு, குறிப்பாக வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை வழங்கியுள்ளனர். அத்துடன், ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கும் இவர்கள் பயிற்சியளித்துள்ளனர். விசேட அதிரடிப்படை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதிலும், இஸ்ரேல் தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்கியுள்ளது.

ஜே.ஆர். ஜயவர்தன 10 இலட்சம் டொலர்களைக் கோரியதை ஆவணங்கள் உறுதிப்படுத்தினாலும், அந்தப் பணம் உண்மையில் வழங்கப்பட்டதா என்பதற்கான ஆதாரம் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் இஸ்ரேலியப் பிரதிநிதிகள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படலாம் என்பதால், ஜே.ஆரின் வெற்றியை இஸ்ரேல் பெரிதும் விரும்பியதாகத் தெரியவருகிறது.

இலங்கையின் மிகக் கொந்தளிப்பான காலப்பகுதியில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிய ஆழமான இரகசிய உறவுகளையும், அதற்குப் பின்னால் இருந்த பூகோள அரசியல் நகர்வுகளையும் இந்த ஆவணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.