நேபாளத்துக்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

10.09.2025 14:26:10

நேபாளத்துக்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

 

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய விமான நிறுவனங்கள் உட்பட பெரும்பாலான விமான நிறுவனங்கள் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள், காத்மாண்டு விமான நிலையம் மூடப்படுவது குறித்து நேபாள விமான அதிகாரிகள் விமானப் பணியாளர்களுக்கு (NOTAM) ஒரு முறையான அறிவிப்பை வெளியிட்டனர்.

விமான நிலையத்தின் மூடல், விமான நிலையம் வழக்கமாக கையாளும் 250க்கும் மேற்பட்ட தினசரி விமானங்களின் சேவைகளை பாதித்துள்ளது.

இதேவ‍ேளை, அதிகரித்து வரும் அமைதியின்மையை எதிர்கொள்ளும் வகையில் நேபாள இராணுவம் தடை உத்தரவுகளையும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் விதித்துள்ளது.

புதன்கிழமை (10) நேபாளத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தகவல் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், தடை உத்தரவுகள் இன்று மாலை 5:00 மணி வரை அமுலில் இருக்கும் என்றும், அதன் பின்னர் வியாழக்கிழமை (11) காலை 6:00 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்து மேலும் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.