22வது திருத்தத்தை குறுக்கு வழியில் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி!

24.08.2026 15:12:41

அனைவரும் வேண்டாம் என்று நிராகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை, எவ்வித சத்தமும் இன்றி குறுக்கு வழியில் நிறைவேற்றிக் கொள்ளவே அரசாங்கம் முற்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

   

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் மிகப்பாரிய சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் உள்ளாகியிருக்கும் அரசாங்கத்தின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு, அதனை எதிர்த்து ஏராளமான தரப்பினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்தத் திருத்தத்துக்கு எதிராக ஏன் இவ்வளவு அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன, ஏன் இவ்வாறானதொரு எதிர்ப்பு உருவாகின்றது என்பதை அரசாங்கம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் திருத்தமானது அரசாங்கம் தனது குறுகிய அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு சீர்திருத்தம் என்பதே தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டாகும்.

இன்று இந்தத் திருத்தத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் நாட்டின் அனைத்து ஜனாதிபதி சட்டத்தரணிகளும் வெளிப்படையாகத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் எதுவும் இதற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்காத நிலையில், பொதுநலவாய மாநாடுகளின் சட்டத்தரணிகள் சங்கம், இந்திய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சட்ட அமைப்புகள் உட்பட சர்வதேச அமைப்புகளும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

இவ்வாறு அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலில் எதிர்க்கும் ஒரு ஆபத்தான காரியத்தைச் செய்வதற்கு ஜனாதிபதி ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகின்றார் என்பதில் எவ்வித தெளிவும் இல்லை.

நாட்டின் நீதித்துறையில் கீழ் நீதிமன்றங்களில் 17 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன, ஆனால் அவை நிரப்பப்படவில்லை. மேல் நீதிமன்றங்களில், அதாவது உயர் நீதிமன்றத்தில் 4 நீதிபதி பதவிகளும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 நீதிபதி பதவிகளும் காலியாக உள்ளபோதிலும் அவை பூர்த்தி செய்யப்படவில்லை.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மட்டும் அதிகரிப்பதன் மூலம் இந்தத் துயரமான பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா என்றால் நிச்சயமாக இல்லை.

கீழ் மட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல், மேல் மட்டத்துக்கு மட்டும் தீர்வு காண முற்படுவதன் பின்னணியில் அரசாங்கம் தனது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றது என்ற பலத்த சந்தேகம் சமூகத்தில் எழுகின்றது.

இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகம் முற்றாகப் புதைக்கப்படுகின்றது. ஜனநாயத்துக்கு இறுதி ஆணி அடிப்பதற்கே தற்போதைய அரசாங்கம் தயார் ஆகின்றது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாகும், ஆனால் அரசாங்கம் அதனைச் செய்வதாகத் தெரியவில்லை.

எனவே, இந்த முயற்சி ஜனநாயகத்தின் அம்சம் அன்றி நாட்டில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.