தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல
ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்க கோருவதும் ஒன்றல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது கொள்கை ரீதியாகப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நிலையை ஏற்கனவே எடுத்திருந்தாலும் இந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற கட்சிகள் இந்த விடயத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது தனது அரசியல் பீடக் கூட்டத்தை கூட்டி இந்தப் பொதுவேட்பாளர் என்ற விடத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், எங்களுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய தமிழ் சிவில் அமைப்புகள், கட்சிகள் அனைத்தையும் இணைத்து இந்த விடயத்தை முன்னெடுத் துச் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் முடிவெடுத்திருக்கின்றோம்.
இதைப் போலவே ஏனைய கட்சிகளும் தங்கள் கட்சிகளின் உயர் பீடங்களைக் கூட்டி தமது முடிவுகளை இன்னும் சில தினங்களில் வெளியிட இருக்கின்றார்கள்.
இவ்வாறு தமிழர் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நியமிப்பது என்ற விடயம் பல்வேறு தரப்பினரதும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது. இதனடிப்படையில் சமூக மட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட அமைப்புகள், சங்கங்கள் இப்போது தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் பொது வேட்பாளர் என்ற விடயத்தைப் பற்றி இப்போது அரசியல் கட்சிகள் பலவும் ஆலோசித்து வருவதுடன் அவற்றை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் இங்கே ஒரு கோரிக்கையை நான் முக்கியமாக முன்வைக்க வேண்டும். தமிழரசுக் கட்சியானது ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பைத் தமது நோக்கமாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் கட்சி மாத்திரமல்ல நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பில் இருந்து கூடுதலான ஆசனங்களையும் வைத்திருக்கக்கூடியஒரு கட்சியாக இருக்கின்றது.
ஆகவே, வரக்கூடிய இந்த ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு கையாண்டால் தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம், தமிழ் மக்களுடைய எதிர்காலத்தைச் சரியான பாதையில் கொண்டு செல்லலாம் என்று சிந்தித்து விரைவாக முடிவை எடுக்க வேண்டிய ஒரு பணி அவர்களுக்கு இருக்கின்றது.
ஆனால், அவற்றை அவர்கள் ஒத்தி வைத்து நாங்கள் காலம் வரும்போது முடிவெடுப்போம் என்று சொல்வது நிச்சயமாக தமிழர்களுடைய எதிர்காலத்திற்கு உகந்த கருத்துக்கள் அல்ல.
ஆகவே, தமிழ் மக்களுடைய நலன்களைக் கருத்தில்கொண்டும் தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதைக் கருத்தில்கொண்டும் தமிழ் மக்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் தமிழரசுக் கட்சியானது ஒரு சரியான முடிவை மிக மிக விரைவாக எடுத்து எல்லோருடனும் இணைந்து பயணிப்பதானது தமிழ் மக்களுக்கு நிச்சயமாக தேவையான ஒரு விடயமாகவே நாங்கள் கருதுகின்றோம்.
மேலும், தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய ஒரு சிலர் குறிப்பாக சிவஞானம் போன்றோர் ஒரு பொது வேட்பாளரை நாங்கள் தேடுகின்றபோதே இந்த விடயம் முடங்கிப் போய்விடும் என்றும், இந்த வேலைகள் எல்லாம் முடக்கப்பட்டுவிடும் என்றும், இது அடுத்த கட்டத்தை நோக்கி நகராது என்ற பாணியிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
உண்மையாகவே இந்த முயற்சி என்பது தோற்றுப் போக வேண்டும் என்று பல பேர் விரும்புகின்றார்கள். அதில் சீ.வீ. கே. சிவஞானமும் ஒருவராக சில சமயம் இருக்கலாம்.
இது மேலும் நகரக் கூடாது, முடக்கப்பட வேண்டும் என்றும் சிந்திக்கிறார்கள். இவ்வாறு இதனை முடக்கினால் சந்தோசப்படுவதற்கும் சில பேர் இருப்பதாகத்தான் எங்களுக்குத் தோன்றுகின்றது.
இதிலும் முக்கியமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது ஐனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்புச் செய்யவேண்டும் என்று இப்போது ஒரு துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிடுவது மாத்திரம் அல்லாமல் இந்த முயற்சிகளுக்கு எதிரான கட்டுக்கதைகளையும் அவர்கள் அவிழ்த்துவிட்டு வருகின்றார்கள். இன்னும் சில பேர் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரும் ஒன்றுதான் என்ற விதமான கருத்துக்களையும் சொல்லி வருகின்றார்கள்.
உண்மையில் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல. இந்தத் தேர்தலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்தத் தேர்தலுக்கு நாங்கள் வாக்களிக்கவேண்டும் என்று அவசியமில்லை என்ற கருத்தைத்தான் அவர்கள் முன்வைக்க முயற்சிக்கின்றார்கள்.
இந்த ஜனாதிபதித் தேர்தல் என்பது இலங்கையில் நடக்கக்கூடிய தேர்தல்.இலங்கை என்ற நாட்டுக்குள் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற அனைவரும் வாழ்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இந்தத் தேர்தலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது முதலாவதாக அர்த்தமற்ற விடயம்.
இரண்டாவதாக இந்தத் தேர்தலை நாங்கள் ஏன் பாவிக்க விரும்புகின்றோம். என்றால் முக்கியமாக இலங்கையில் இருப்பது வெறுமனே ஒரு பொருளாதாரப்பிரச்சினை மாத்திரம்தான், அந்தப் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று அரசு இலங்கையிலும் வெளி உலகத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
எனவே, புரையோடிப் போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படமாட்டாது என்பதை உலகறியச் செய்யவும், சிங்கள மக்களுக்குப் புரிய வைக்கவும் வேண்டும்.
மேலும் பகிஷ்கரிப்பால் எதனையுமே சாதிக்கப்போவது கிடையாது. வெறுமனே துண்டுப்பிரசுரங்களை அடித்து அனைத்து
மக்களுக்கும் கொடுத்து விடலாமே தவிர இந்தப் பகிஷ்கரிப்பின் மூலம் நிச்சய மாக எதனையுமே சாதிக்கப்போவது கிடையாது.
பொது வேட்பாளர் என்ற விடயத்தை நாங்கள் முன்னெடுக்கக்கூடிய நிலையில் ஆதரவு கோரி இன்னும் சில தினங்களில் ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணம் வருகின்றார்கள். அதேபோல் மற்றவர்களும் இங்கு வரவிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள இந்தக் கால நேரத்தை நாங்கள் சரியான முறையில் கையாள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.