பழைய முறைமையில் மாகாணசபைத் தேர்தல்.

30.06.2026 09:04:08

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் எதிர்வரும் வாரம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெண் பாராளுமன்ற ஒன்றியத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

வேட்புமனுத்தாக்கலின் போது பெண் பிரதிநிதித்துவத்துக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கீடுகள் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் பெண் பிரதிநிதித்துவம் குறித்து ஆராய்வது காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயற்பாடாக கருதப்படும் என்று குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காகவே விசேட செயற்குழு நியமிக்கப்பட்டது.ஒன்று இந்த குழு ஊடாக விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் அல்லது குழுவை கலைக்க வேண்டும் என்று அதிருப்தி வெளிப்படுத்தினார்.

பாராளுமன்ற விசேட குழுவை கலைத்தால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குழுவின் முன்னிலையில் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த குழுவின் தலைவர் விஜித்த ஹேரத் குழுவை கலைப்பதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தால் அவ்வாறே செய்யலாம். பெண் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால் சாணக்கியன் முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு நாங்கள் எதிராகவே வாக்களிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை அரசியலமைப்பு முரணல்ல என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெளிவாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆகவே தனிநபர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தால் மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு திட்டவட்டமாக வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு அதன் தலைவர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த வாரம் பாராளுமன்ற கட்டத் தொகுதியில் கூடியது.

பெண் பிரதிநிதித்துவம் குறித்து கலந்துரையாடுவதற்கு பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.இதன்போது மாகாணசபைத் தேர்தல் முறைமையில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கல் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கு நாங்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பெண் பிரதிநிதித்துவத்தை குறிப்பிட்டுக் கொண்டு காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடக்கூடாது என்பது எமது நிலைப்பாடு.

மாகாணசபைத் தேர்தல் வேட்புமனுத்தாக்கலின் போது சுய விருப்பத்தின் அடிப்படையில் பெண் பிரதிநிதித்துவதற்கு போதுமான இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு அரசியல் கட்சிகள் எழுத்துமூலமாக இணக்கம் தெரிவித்துள்ளன.

பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும், அதன்போது இளைஞர் மற்றும் பெண் பிரதிநிதித்துவதற்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு மூன்று அவதானிப்புக்களை முன்வைத்துள்ளது. அதேபோல் சட்டமா அதிபர் திணைக்களமும் யோசனைகளை முன்வைத்துள்ளது. ஆகவே அந்த யோசனைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த குழுவின் தலைவர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ஆனால் பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் விசேட கவனம் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் கருத்து தெரிவித்த குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பெண் பிரதிநிதித்துவம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை மீண்டும் பிற்போடும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டாம். பாராளுமன்ற பெண் ஒன்றியத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.அவர்கள் முன்வைக்கும் யோசனையில் கோரப்படும் ஒதுக்கீடுகளை வழங்க முடியுமா என்பதில் சிக்கல் நிலை ஏற்படும். குழுவின் அறிக்கை எப்போது சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளீர்கள் என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த குழுவின் தலைவர் விஜித்த ஹேரத் இன்னும் 06 மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக குறிப்பிட்டார்.எவ்வாறாயின் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்த தனிநபர் பிரேரணை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணல்ல என்று சட்டமா அதிபர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.அது ஒரு முன்னேற்றகரமானதொரு செயற்பாடு.

இருப்பினும் அந்த தனிநபர் பிரேரணையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால் அதற்கமைய செயற்பட முடியாது. பழையத் தேர்தல் முறைமைக்கு அமைவாகவே தேர்தலை நடத்த முடியும்.அதற்கான திருத்தங்களை முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த குழுவின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன் ஆகியோர் பெண் பிரதிநிதித்துவத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போதைய சந்தர்ப்பத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை காரணம் காட்டி மாகாணசபைத் தேர்தலை பிற்போட கூடாது என்பதையே வலியுறுத்துகிறோம் என்றனர்.