கனடாவின் பொருட்கள் எங்களுக்குத் தேவை இல்லை

03.02.2025 07:59:28

‘கனடாவில் உற்பத்தி செய்யப்படும்  எந்தப் பொருட்களும் எங்களுக்குத் தேவையில்லை. எங்களிடம் ஆற்றல் உள்ளது ‘ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக  கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி  பதவியேற்ற குடியரசு கட்சியின் தலைவர்  டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக அண்மையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும்  அமெரிக்க உற்பத்திகளுக்கு அதிகளவான வரியனை விதித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இந்த இறக்குமதி  பெப்பிரவரி 02 ஆம் திகதியிலிருந்து(நேற்று)   அமுல்படுத்தப்படும் என்றும் கனடா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கனடாவின் அறிவிப்பால் ஆத்திரமடைந்துள்ள ட்ரம்ப் ”கனடாவில் உற்பத்தி செய்யப்படும்  எந்தப் பொருட்களும் எங்களுக்குத் தேவையில்லை. எங்களிடம் ஆற்றல் உள்ளது. எங்களால் சொந்தமாக உருவாக்க முடியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன்  ”நாட்டு மக்களுக்கு தேவைப் படும் அளவை விட அதிகமான அளவு எங்களிடம் பொருட்கள் உள்ளன. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக உருவாக்குவோம். அதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைந்த வரி மற்றும் இராணுவ பாதுகாப்புகள் ஆகியவற்றை உருவாக்குவோம்” என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.