சுரேஷ் சாலேவின் தடுப்புக்காவலை தீர்மானிப்பது யார்?

26.08.2026 09:02:10

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சாலேயின் தடுப்புக் காவல் உத்தரவை நீடிப்பது தொடர்பான தீர்மானம், விசாரணை அதிகாரிகளின் கோரிக்கை மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமையவே மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (25) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே தொடர்பான தடுப்புக் காவல் உத்தரவு குறித்த தீர்மானம் விசாரணை அதிகாரிகளின் தேவைக்கேற்பவே எடுக்கப்படும்.

சுரேஸ் சலேவுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தடுப்புக் காவலில் 90 நாட்களில் சுமார் 82 நாட்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக நினைக்கிறேன். இதனால், புலனாய்வு அதிகாரிகள் எதிர்பார்த்த விசாரணைகளை முழுமையாக முன்னெடுக்க முடியாமல் போயிருக்கலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். எனவே, விசாரணைகளை மேலும் தொடர வேண்டுமா இல்லையா, அதற்காக எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை புலனாய்வாளர்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

இது முற்றிலும் நீதிமன்றம் சார்ந்த ஒரு விடயமாகும். புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் அடுத்து தடுப்புக் காவல் உத்தரவு எவ்வளவு காலத்திற்கு வழங்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும். இது புலனாய்வு அதிகாரிகளின் பொறுப்பிலுள்ள ஒரு வேலையாகும்.

எது எப்படியிருப்பினும், அந்த 90 நாட்களில் கணிசமான அளவிற்கு அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளித்திருந்தால், கணிசமான அளவு தகவல்களைக் கண்டறிய முடிந்திருக்கும் என்றார்.