உடை நிறத்தை கடைசி நேரத்தில் மாற்றுமாறு கூறியது ஏன் ?
நடுவர்கள் தோல்வி என அறிவித்தது என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் கூறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பெண்களுக்கான 51 கிலோ எடைபிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மேரிகோம் போராடி தோல்வி அடைந்தார். அவர் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியாவிடம் 3-2 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
கடைசி ரவுண்டில் இருவரும் சரமாரியாக குத்துகளை விட்டனர். ஆனால் நடுவர்களின் முடிவின்படி வலென்சியா வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நடுவர்களின் தீர்ப்பால் மேரிகோம் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நடுவர்களின் தீர்ப்பு மோசமாக இருந்தது இதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் மேரி கோம் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக எனது உடை நிறத்தை மாற்ற அறிவுறுத்தப்பட்டேன். ஏன் உடை நிறத்தை மாற்ற வற்புறுத்தப்பட்டேன் என்பது குறித்து யாராவது விளக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.