கிழக்கு முனையத்தின் அபிவிருத்தியில் இந்திய நிறுவனத்தை சேர்த்துக்கொள்வது அவசியம்

27.01.2021 08:51:47

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை;கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் எதிர்வரும் மனித உரிமை பேரவை அமர்விற்காக இலங்கை அர்த்தபூர்வமான திட்டங்களை வகுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பின்பற்றப்படுவதை நான் பார்க்கவிரும்புகின்றேன் என தெரிவித்துள்ள அவர் இது இந்த விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ச்சியாக பேணிவரும் நிலைப்பாட்டிலிருந்து விலகிச்செல்வதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
அனைவரும் எதிர்பார்த்தளவிற்கு அதிகளவு முன்னேற்றம் காணப்படவில்லை என்பது குறித்த கரிசனை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் இலங்கையும் ஏனைய நாடுகளும் இலங்கைக்கு உதவ முன்வந்தமைக்கு இதுவே காரணம் இது இலங்கையுடன் வலிந்து பிரச்சினையை உருவாக்குதவல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மாறாக இலங்கை தனது மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை குறித்த அமெரிக்காவின் கரிசனையை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தூதுவர் இந்த விடயத்தில் அனைத்து சமூகங்களினதும் மத நம்பிக்கைகளை மதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது இலங்கையின் கடல்சார் எதிர்காலத்திற்கு உகந்த விடயம் என தெரிவித்துள்ள அலைனா டெப்பிளிட்ஸ் இந்த விடயத்தில் தனியார் துறையினரின் பங்களிப்பு அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.