இந்திய அரசின் நியாயமான சந்தேகத்தை நாங்கள் தீர்த்து வைத்தோம்!
|
நாட்டின் எதிர்வரும் காலங்களில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு அபிலாஷைகள் 13ஆவது திருத்தம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மற்றும் மலையக மக்களின் அதிகாரப் பகிர்வு ஆகிய முக்கிய பல விடயங்களை முன்னிலைப்படுத்தி; இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளரிடம் எடுத்துரைத்தாக தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டினார். |
|
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் மலையகத் தமிழ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் புதன்கிழமை (5) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பாராடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைத் தூதரகத்தின் இந்திய அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். சந்திப்பு தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் தங்களது தேசிய மற்றும் பிராந்திய அதிகாரப் பகிர்வு அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடத்த வேண்டிய மாகாண சபைத் தேர்தலிலும், புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையிலும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் எடுத்துக் கூறினோம். புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரையில், புதிய அரசியலமைப்பு என்பது இன்று அரசியலமைப்பில் இருக்கக்கூடிய மாகாண சபை முறைமையை ஒழித்து விடுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுமா என்ற இந்திய அரசின் நியாயமான சந்தேகத்தை நாங்கள் தீர்த்து வைத்தோம். ஏனென்றால், கடந்த நல்லாட்சியின் போது புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தை ஆரம்பித்த பொழுது, அது நிறைவேறாவிட்டாலும் கூட ஒரு இடைக்கால அறிக்கை வரை நாங்கள் வந்திருந்தோம். ஆகவே, நண்பர் அநுர குமார திசாநாயக்க தாம் ஜனாதிபதியானால் அந்த இடைக்கால அறிக்கை வரை நாம் அனைவரும் எட்டிக்கொண்டிருக்கக்கூடிய அந்த நிலைப்பாடுகளில் இருந்துதான் புதிய பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்போவதாகவும், எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் தொடங்கப்போவதாக இல்லை என்றும் கூறியிருந்தார். அது நல்ல விடயம். ஆகவே நாங்கள் இடைக்கால அறிக்கை வரை வந்தது, அதாவது இன்றைய அரசியலமைப்பில் இருக்கக்கூடிய 13 ஆம் திருத்தத்தை, மாகாண சபை முறைமையை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கின்றது. ஆகவே இந்திய அரசுக்கு அத்தகையதொரு சந்தேகம் நியாயமாக இருந்தாலும் கூட, அது தற்போது அவசியமில்லை. அநுர குமார திசாநாயக்க தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாங்கள் கூறியிருந்தோம். அதேபோல, இந்நாட்டில் ஏறக்குறைய 12, 13 மாவட்டங்களில் சிதறிப் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், எங்களுக்கு என்று ஒரு மாகாண சபை நாங்கள் பெரும்பாண்மையாக வாழக்கூடிய, முதலமைச்சராக வரக்கூடிய மாகாண சபை கிடையாது என்ற காரணத்தினாலே, பரந்து விரிந்து வாழும் மக்களுக்கான உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலச்சார்பற்ற அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் 'நிலச்சார்பற்ற சமூக சபை' என்ற புதிய பிரேரணையையும் நாங்கள் புதிய அரசியலமைப்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராக இருப்பதாக விக்ரம் மிஸ்ரிக்கு நாங்கள் தெரிவித்தோம். அத்துடன், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றும் முழுதாக அகற்றிவிடும் எண்ணம் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு எப்போதுமே கிடையாது. கடந்த கால அரசியலமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது கூட, மட்டுப்படுத்தப்பட்ட, அதிகாரம் குறைக்கப்பட்ட, பாராளுமன்றத்திற்கு பதில் சொல்லக்கூடிய, ஆனால் முழு நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் கூறியிருந்தோம். முழு நாட்டுக்கும் பதில் கூறக்கூடிய ஜனாதிபதி ஒருவர் இருக்கும் பொழுதுதான், அவர் தேர்தல்கள் காலங்களிலும் அதற்கு இடைப்பட்ட காலங்களிலும் வாழக்கூடிய எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் அவாக்களுக்கும், தேவைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். எங்களது பிரச்சினை தேசிய மட்டத்திலே விவாதிக்கப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒட்டுமொத்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஜனாதிபதி முறைமைதான் காப்பாற்றி நிற்கிறது என்பதால், இந்த நிலைப்பாட்டை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதையும் நாங்கள் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் மிஸ்ரிக்குக் கூறியிருந்தோம். மேலும், இந்திய அரசாங்கத்திலே அநுர குமார திசாநாயக்க தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும், இந்தியாவுடனான உறவு சார்பாகவும் ஒரு நேர்முகமான சிந்தனை கொண்டிருந்தாலும் கூட, அவரது அரசாங்கத்திலும் அவரது கட்சியிலும் இருக்கக்கூடிய பலர் எதிர்மறை எண்ணப்பாடுகள் கொண்டிருப்பதாக நாங்கள் கூறியிருந்தோம். குறிப்பாக, இந்த அரசாங்கத்தைச் சார்ந்த தமிழ் பிரதிநிதிகள் அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரம் பேசுதல் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுதே, அதை எள்ளி நகையாடி, அதைத் தரம் தாழ்த்தி, தங்கள் கட்சித் தலைவர் அல்லது நாட்டின் ஜனாதிபதியே முன்வந்து எங்களோடு பேசுகின்ற பொழுது அதை புறக்கணிக்கும் உருவமாக குவித்து இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் இந்திய வெளியுறவு அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தோம். ஆகவே இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நாடி நாம் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய மக்களின் நியாயமான விருப்பங்களைப் பெற்றுக்கொள்வதிலே எங்காவது தடை ஏற்பட்டால், அது எம்மாலோ அல்லது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவாலோ என்றல்லாமல், இந்த அரசாங்கத்தில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல்வாதிகளாலேயே அது நிகழும் என்று எமது எச்சரிக்கையை நாங்கள் இந்திய அரசாங்கத்துக்குத் தெரிவித்திருந்தோம் என்றார். |