வடக்கில் கதவடைப்புக்கு அழைப்பு !

23.01.2021 10:59:01

கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம் என, இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரவுள்ளதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ந.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லை தாண்டிய மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வடகடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகிறது.

வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டுள்ளனர்.

எல்லை தாண்டும் மீனவர்களை கடற்படை கைது செய்து வருகிறது, இது வரவேற்கத்தக்கது. கைது நடவடிக்கை தொடர வேண்டும் என்பது எமது தொடர்ச்சியான கோரிக்கை.

இலங்கை கடற்பரப்பில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே வேளை எமது கடற்பரப்பிற்குள் நுழைய வேண்டாம் என, மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.

சில அசம்பாவிதங்களை வைத்து எமது கடற்பரப்புக்குள் நுழைந்து எமது வளத்தை அழிக்க அனுமதிக்க முடியாது.

கறுப்புக் கொடிகளை படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் விடுத்துள்ளது அடாவடி - அதனை நாம் அனுமதிக்க முடியாது என்றார்.