தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிக்கு கவர்னர் பதவி...?

10.11.2022 07:52:03

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்து வந்த தமிழிசை சவுந்த‌ர‌ராஜன், நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அதில் அவர் தோல்வி அடைந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா கவர்னராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அவர் புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் செயல்பட்டு வருகிறார். இதேபோன்று, பா.ஜ.க.வை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த, மூத்த உறுப்பினர் இல.கணேசன் கடந்த ஆண்டு மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர், மேற்கு வங்காள கவர்னர் (பொறுப்பு) பதவியையும் வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரின் கடந்த கால கட்சி பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கவர்னர் பதவி வழங்க அக்கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது. அதில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களாக உள்ள எச். ராஜா மற்றும் முன்னாள் எம்.பி. மற்றும் முன்னாள் மத்திய இணை மந்திரியான பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.