புத்தாக்க ஆராய்ச்சிகளுக்கு அரசின் முழுமையான ஆதரவு.
அரசாங்கம் என்ற வகையில் புத்தாக்க ஆராய்ச்சிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், நிதியுதவி மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்பைக் கட்டியெழுப்பும் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன வினவிய சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
புதிய தொழில்முனைவு மற்றும் தொழினுட்பத்தை வர்த்தகமயமாக்கலை ஊக்குவிப்பதற்காகப் பல்கலைக்கழகங்களும் அரச நிறுவனங்களும் இணைந்து தொழினுட்ப உதவி மையங்களை (Incubation Centres) செயற்படுத்துவதாகக் கூறியள்ளார்.
அதற்கமைய, இலங்கை புத்தாக்க உற்பத்தியாளர்களின் ஆணைக்குழுவினால் (SLIC) தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், யாழ்ப்பாணம், ரஜரட்ட மற்றும் ருஹுண பல்கலைக்கழகங்களை மையமாகக் கொண்டு 'Technology Incubation Centres' நிறுவப்பட்டுள்ளதுடன், அவற்றின் மூலம் மூலப்படிம அபிவிருத்தி, உற்பத்தித் திட்டமிடல், வணிக அபிவிருத்தி மற்றும் அறிவுசார் சொத்து முகாமைத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழினுட்ப அமைச்சின் விதாதா (Vidatha) பிரிவினால் செயற்படுத்தப்படும் 'University Linked Incubation Centres' திட்டத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்குத் தொழினுட்ப உதவி, தரப் பரிசோதனைகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் வணிக ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படவிருக்கின்றன.
2026ஆம் ஆண்டில், தற்போது வவுனியா, ருஹுண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் இம்மையங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மூலம் உற்பத்திகளின் தரத்தை உயர்த்துவதற்கான தரப் பரிசோதனைகள், தொழில்நுட்பப் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல் என்பன முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக விதாதா பிரிவு மற்றும் தேசிய தர உட்கட்டமைப்பு வசதிக் கட்டமைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் ஊவா வெல்லஸ்ஸ, ரஜரட்ட மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறான தொழினுட்ப உதவி அமைப்புகளை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தாக்க உற்பத்தியாளர்களுக்காக சலுகை மூலதனம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்து விளக்கிய பிரதமர், தேசிய புத்தாக்க முகவர் அமைப்பினால் (NIA) செயற்படுத்தப்படும் 'Innovation Voucher Schemes' ஊடாக ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்து ஆரம்பக்கட்ட நிதியுதவியை வழங்குவதாகக் கூறினார்.
அத்துடன் Seed funding மற்றும் Venture Capital போன்ற முதலீட்டு வாய்ப்புகளை அணுகுவதற்கும் புதிய புத்தாக்க உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு வழங்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
இதைத் தவிர, SLIC நிறுவனம் 'Innovative Bis' கடன் உதவி சேவை ஊடாக வர்த்தக வங்கி கட்டமைப்போடு இணைந்து குறைந்த வட்டி வீதத்தின் கீழ் மூலதனத்தை வழங்குவதுடன், Startups நிறுவனங்களுக்கு முறையான மதிப்பீட்டின் பின்னர் ஒரு மில்லியன் ரூபா வரையிலான ஆரம்ப மூலதனத்தை வழங்குவதற்கும், மேலதிக நிதி வசதிகளைப் பெறுவதற்கு வங்கிகளுக்கான வழிகாட்டுதலைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான வரவுசெலவுத் திட்ட யோசனைகள் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதமர்,
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைக்கு இடையிலான தொடர்புகளை ஊக்குவிப்பது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய ஆராய்ச்சி சபை (NRC) மற்றும் தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) என்பன கைத்தொழில் துறையுடன் இணைந்து ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் இறக்குமதி மாற்றீட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்பின் கீழ் இந்திய அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப திணைக்களத்துடன் இணைந்து 16 ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் 22 பட்டறைகளுக்கான ஒப்பந்தங்கள் ஜூலை முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டுள்ளன.
அத்துடன் சர்வதேச நிதியைப் பெறுவதில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தொழினுட்பப் பரிமாற்றத்திற்காக 'National Technology Transfer Platform' தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இறுதியாக, புத்தாக்க உற்பத்தியாளர்களின் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக 2014ஆம் ஆண்டு முதல் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) கருத்துருவிற்கு அமையத் தொழினுட்பத் தகவல்களை அணுகுவதற்கான தொழினுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களில் அவை நிறுவப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.